தமிழ்நாட்டில் 2021 மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், போலி கார்டுகளை ஒழிக்க வேண்டும் என்ற உறுதிமொழிக்கு இணங்க, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், "தமிழகத்தில் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ வசிக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, 2022 மார்ச் 21 ஆம் தேதி நிலவரப்படி 86,986 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக, நியாய விலைக் கடைகளில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மே 7, 2021 முதல் மார்ச் 21, 2022 வரை, வழங்கப்பட்ட புதிய ஸ்மார்ட் குடும்ப (ரேஷன்) கார்டுகளின் எண்ணிக்கை 10,92,064 ஆகும். அனைத்து போலி ரேஷன் கார்டுகளையும் அகற்ற அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. மே 2021 முதல் பிப்ரவரி 2022 வரை 1,98,264 கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
திருநங்கைகள் சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தனியாக வசிக்கும் திருநங்கைகளுக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை அரசு வழங்கி வருகிறது. அதன்படி, மார்ச் 21, 2022 வரை 2,429 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 2,21,31,032 ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் உள்ளன. அவை டெபிட்/கிரெடிட் கார்டு போன்றது ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil