தமிழகத்தில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அண்மையில் வீடியோ ஒன்று வெளியானது. இது இருமாநிலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது போலி வீடியோ என்றும் அதை யாரும் நம்ப வேண்டாம் என அரசு விளக்கம் அளித்தது. இதையடுத்து போலி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற கடுமையான சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அது உண்மையல்ல என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பீகாரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என சமூகவலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வருவதாக ஆளுநர் மாளிகை கவனத்துக்கு வந்துள்ளது.
அந்த தகவல் உண்மையல்ல. அதுபோன்று எந்தவொரு தனிநபருக்கும் எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இதுபோன்ற தவறான தகவல்களை பகிர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“