2047-ம் ஆண்டு சுதந்திர தினத்தில், இந்தியா உலகின் முதன்மை நாடாக விளங்கும்; ஆளுநர் ஆர்.என்.ரவி
ஒரு ரூபாயை அரசு ஒதுக்கினால் பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றது. மீதமுள்ள 85 பைசா முறைகேடாக ஊழலுக்கு இரையாகி வந்தது; டிஜிட்டல் இந்தியா இதனை தகர்த்துள்ளது - திருச்சி ஐ.ஐ.எம் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
ஒரு ரூபாயை அரசு ஒதுக்கினால் பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றது. மீதமுள்ள 85 பைசா முறைகேடாக ஊழலுக்கு இரையாகி வந்தது; டிஜிட்டல் இந்தியா இதனை தகர்த்துள்ளது - திருச்சி ஐ.ஐ.எம் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) தக்ஷா 2.0 என்ற தலைப்பில் தலைமைத்துவம் மாநாடு நடைபெற்றது. ஐ.ஐ.எம் இயக்குநர் பவன்குமார் சிங் தலைமை வகித்தார். டீன் சரவணன் முன்னிலை வகித்தார்.
Advertisment
இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது; மத்திய அரசு தொலைநோக்கு பார்வையுடன், நிதி ஆயோக் மூலம் ஐந்தாண்டு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதேவேளை, திட்டக்கமிஷன் இருந்தபோது, தேவையான அளவுக்கு பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை உருவாக்கப்படாத நிலையில், தற்போது பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, நாடு மேம்பட்டு வருகிறது.
அதே வேளையில், வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஒழிப்பு, உலகளாவிய சுகாதார பராமரிப்பு ஆகியவற்றை திட்டக் கமிஷன் மேற்கொள்ளவில்லை. சிறந்த தலைவர்கள் மாற்றத்துக்கு காத்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் மாற்றத்துக்காக காத்திருக்காதவர் பிரதமர் மோடி. இதனால் தான் பொருளாதார பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி படிக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், சூரிய சக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்துள்ளார். நான் அந்த மாணவரை அழைத்துப் பாராட்டினேன். உலகில் சூரிய ஒளி ஒன்று தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக உள்ளது. அதை நாம் பரவலாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.
இந்தியாவில் முக்கிய பிரச்சினையாக உள்ள ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக டிஜிட்டல் இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாயை அரசு ஒதுக்கினால் பயனாளிகளுக்கு 15 பைசா தான் சென்றது. மீதமுள்ள 85 பைசா முறைகேடாக ஊழலுக்கு இரையாகி வந்தது. இதையடுத்து, இந்தியாவில், 5 மில்லியன் ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, அரசின் நலத் திட்டங்கள் தற்போது நேரடியாக பயனாளிகளுக்கு செல்வதால், இடையில் இருப்பவர்களால் முறைகேடு செய்ய முடிவதில்லை.
உலகில் பொருளாதார சக்திமிக்க நாடுகளில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா தனது நூறாவது சுதந்திர தினத்தை 2047-ம் ஆண்டு கொண்டாடும்போது, உலகத்தின் முதன்மை நாடாக இந்தியா விளங்கும். இவ்வாறு ஆளுநர் உரையாற்றினார்.
விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் அபிஷேக் டோடாவர் நன்றி கூறினார். முன்னதாக, திருச்சி வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil