மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தாத நிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மும்பை நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் காமாட்சி முதலி, பெண்கள் உயர் கல்விக்கு உதவும் வகையில் மாதம் ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம் என தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா மு.வ.அரங்கில் இன்று நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மும்பை நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் காமாட்சி முதல்வர், பதிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் வரவேற்று பேசினார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் ராமகிருஷ்ணன், தேர்வாணையர் தர்மராஜ், சிண்டிகேட் உறுப்பினர்கள் தவமணி கிறிஸ்டோபர், நாகரத்தினம், தங்கராஜ் மற்றும் மதுரை ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பட்டமளிப்பு விழா மூலம் 1,34,570 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக சிண்டிக்கேட், சென்ட் 2 முறை பரிந்துரை செய்து, இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காததால் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார்.
பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் 6 பேரில் 3 பேர் மட்டும் பங்கேற்றனர். செனட் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கென ஒதுக்கிய இருக்கைகள் காலியாக இருந்தன. உதவி பேராசிரியர்கள் சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோர் ஆளுநர் கையில் இருந்து முனைவர் பட்டம் பெற மறுத்து, பங்கேற்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு அதிகரித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. விழா நடக்குமிடம், நுழைவு வாயில் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 200 மீட்டருக்கு முன்பே வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, விழாவுக்கு செல்வோர், பட்டம் பெறும் மாணவர்கள், பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவில் மாணவர் ஒருவரின் குடும்பத்தினர் தி.மு.க கொடி கட்டிய காரில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். கொடியை காருக்குள் கழற்றி வைக்க அறிவுறுத்தினர். விழாவுக்கு செல்வோர் அனைவரும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
மேலும் இந்த இதேபோன்று நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. பட்டம் பெறுபவர்கள் குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை எனவும் ஆளுநர் உள்ளே அரங்கிற்குள் நுழையும் பொழுது எழுந்து நின்று அனைவரும் வரவேற்க வேண்டும் எனவும், ஆளுநர் மேடையில் அமர்ந்த பின்பு தான் மற்றவர்கள் இருக்கையில் அமர வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதே போன்று பட்டம் பெறும் போது பட்டங்களை பெறுபவர்கள் ஆளுநருக்கு வணக்கம் செலுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய பின்னர் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் புறப்பட்டு சென்றார். கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் உரையாற்றிய நிலையில் இந்த ஆண்டு உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார்.
அதேநேரம் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மும்பை எச்.பி.என்.ஐ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் யூ.காமாட்சி முதலி உரையாற்றினார். அவர் பேசியதாவது: ''இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தொழில், கல்வி, பொருளாதாரம், மின்சாரம், பாதுகாப்பு போன்ற வளர்ச்சியை பெற்றுள்ளது. பெண்கள் இன்றி நாடு வளர்ச்சி பெறாது என சுவாமி விவேகானந்தர் கூறியபடி, பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களுக்கான முன்னேற்றத்துக்கு கல்வி ஒன்றே ஒரே வழி. பெண்கள் உயர் கல்வியை அதிகம் படிக்கின்றனர்.
கிராமங்களில் பெண்கள் உயர் படிப்பில் சேர போதிய பொருளாதாரமின்றி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியில் சேர உதவும் வகையில் தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம். ஆனாலும், வரலாற்று ரீதியில் பெண்களுக்கு எதிரான தாக்குதல், முன்னேற்றத்தில் தடை உள்ளது. இந்நிலை மாற வேண்டும்.
மின்சார உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற வேண்டும். மொத்த மின் உற்பத்தியில் 2 அல்லது 3 சதவீத அணு உலை மூலம் மின்சாரம் கிடைக்கிறது. உலக மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் 35 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள். இவர்களை முறையாக வழி நடத்தினால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவலாம். உத்தரவாதம் என்பது வாழ்க்கைக்கு உதவாது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதன்மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு மாற்றலாம்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகள், படைப்பாற்றல் திறன் தேவை. எப்போதும், கல்வி, தொழில் நுட்பம், சிந்தனைகள் சாதாரண மக்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். எந்தத் தொழில், பணியாக இருந்தாலும், மனிதநேயமும் இருக்கவேண்டும்.” இவ்வாறு அவர் உரையாற்றினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“