அரசு நிர்வாகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாநில கவர்னர் ஆர்.என்.ரவியின் பரிசீலனைக்கு அனுப்பிய மசோதாக்கள் மீது இந்திய குடியரசுத் தலைவர் செயல்படுவதைத் தடுக்க விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியது. இதற்கிடையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Don’t want to restrain President Murmu from acting on bills referred to her by Tamil Nadu Governor: SC
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ரவி காலதாமதம் செய்ததாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களையும் மாநில சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றியதால், ஆளுநர் ரவிக்கும் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
விசாரணையின்போது மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ரவியின் காலதாமதத்தை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, கட்சிகள் தங்கள் குறைகளை உச்ச நீதிமன்றத்திற்கு நகர்த்துவதற்கு ஆளுநர்கள் ஏன் காத்திருக்க வேண்டும் என்றும் கேட்டது.
கடினமான கேள்விகளை முன்வைத்து, 2020 ஜனவரியில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டு, மூன்று ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டது.
ஆளுநரின் அலுவலகம் 181 மசோதாக்களைப் பெற்றதாகவும், 152 மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகவும், 5 அரசால் வாபஸ் பெறப்பட்டதாகவும் பெஞ்ச் முன்பு பதிவு செய்திருந்தது. ஒன்பது மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கப்பட்டதாகவும், மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் தடுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஒரு மாநில ஆளுநர் பரிந்துரைக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் தமிழக ஆளுநரை முதல்வரைச் சந்திக்கச் சொன்னது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் போக்கு நிலவி வருகிறது. “முட்டுக்கட்டைக்கு ஆளுநர் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... முதலமைச்சருடனான முட்டுக்கட்டையை ஆளுநர் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். கவர்னர் முதலமைச்சரை அழைத்து, அவர்கள் அமர்ந்து விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”என்று பெஞ்ச் கூறியது.
இந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் கேட்டபடி, முதல்வர் மு.க.ஸ்டாலினும், கவர்னர் ரவியும் சந்தித்து தீர்வு காண ஒப்புக்கொண்டுள்ளனர் என தமிழக அரசு மற்றும் ஆளுநரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி ஆகியோர் கூறினர்.
அப்போது, “தேநீர் அல்லது எந்தக் கடினமான பானமும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான கேள்வி, இந்த நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்” என்று தி.மு.க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் கவர்னர், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்ப முடியுமா என்பதுதான் முக்கிய கேள்வி.
அபிஷேக் சிங்வி, சுருக்கமான விசாரணையின் போது, பிரச்சினை முடிவடையும் வரை குடியரசுத் தலைவர் தனக்கு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு உத்தரவை பிறப்பிக்குமாறு பெஞ்ச் இடம் வலியுறுத்தினார். “அடுத்த முறை வரும்போது குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிறைவேற்றிவிட்டார் அல்லது நிராகரித்துவிட்டார் என்ற எண்ணம் எங்களுக்கு இருக்க வேண்டாம். தற்போதைய நிலை தொடரட்டும்” என்று அபிஷேக் சிங்வி கூறினார்.
“இந்திய ஜனாதிபதியை நாங்கள் தடை செய்ய விரும்பவில்லை. அது நன்றாக இருக்காது. மசோதாக்கள் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் சென்றிருந்தால், அதைச் செயல்பட வேண்டாம் என்று குடியரசுத் தலைவரிடம் நாங்கள் கேட்க முடியாது, ”என்று தலைமை நீதிபதி கூறினார்.
பெஞ்ச் பின்னர் வழக்கை அட்டர்னி ஜெனரலைக் கவனிக்குமாறு கேட்டு, மாநில அரசின் மனுவை ஜனவரி மூன்றாவது வாரத்தில் விசாரணைக்கு ஒத்திவைத்தது.
"இந்த விஷயத்தில் நாங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்வோம், ஆனால் இதற்கிடையில் ஆளுநர் மற்றும் முதல்வர் ஏன் சந்திக்க கூடாது? ஏதாவது வழி இருந்தால்... முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே ஏதாவது ஒரு வாய்ப்பு திறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பிக்கட்டும். சர்ச்சையை தீர்ப்போம். நிர்வாகத்தின் செயல்பாடு தொடர வேண்டும்,” என்று பெஞ்ச் கூறியது.
இதற்கிடையில், ஆளுநர் ரவி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். வெள்ள நிவாரணப் பணிகள் முடிந்ததும் சந்திப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“