சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதனையடுத்து 8 நாட்களாக வெற்றி துரைசாமியின் உடலை தேடும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கிய நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
வெற்றி துரைசாமி உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
வெற்றி துரைசாமி உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல், வெற்றி துரைசாமி உடலுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், சசிகலா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“