மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை (டிசம்பர் 28) ஆய்வு மேற்கொள்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்முறையை கண்டித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, விசாரணை நடத்தியது. அப்போது சென்னை காவல் ஆணையர் மற்றும் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ஆய்வு செய்ய உள்ளார். நண்பகல் 12.30 மணிக்கு ஆளுநர் ஆய்வு மேற்கொள்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“