சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழக ஆளுனரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதையும் படியுங்கள்: பா.ஐ.க திட்டங்கள் தோல்வி; அவர்களுக்கு இது வாழ்வா, சாவா தேர்தல்: தி.மு.க கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, தனது பேச்சை தமிழில் தொடங்கினார். ஆர்.என்.ரவி தனது பேச்சில், மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், நமது ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களே, மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு ஸ்டாலின் அவர்களே, அமைச்சர் டாக்டர் பொன்முடி அவர்களே, துணைவேந்தர் டாக்டர் கவுரி அவர்களே, மரியாதைக்குரிய அழைப்பாளர்களே, என் இனிய மாணவச் செல்வங்களே, இங்கு கூடி இருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்! நமது குடியரசுத் தலைவரை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். இவ்வாறு தமிழில் பேசினார்.
மேலும், நண்பர்களே, இந்தச் சந்தர்ப்பத்தில் இன்று பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழில் வாழ்த்து தெரிவித்த ஆளுனர், தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். இறுதியாக தமிழில் வாழ்க தமிழ், வாழ்க பாரத், ஜெய்ஹிந்த் என்று கூறி தனது உரையை முடித்தார். ஆளுனரின் தமிழ் பேச்சை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் வியந்து பார்த்தனர்.
ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் பொறுப்பேற்றப்போது, விரைவில் தமிழ் கற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil