சென்னை அடுத்த மாதவரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மாநில சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பபட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (ஏப்ரல் 12) தெரிவித்தார். மசோதாவின் ஒப்புதலை தாமதப்படுத்தும் ஆளுநரின் நடவடிக்கை மக்கள் விருப்பத்திற்கு எதிரானது என்று அமைச்சர் கூறினார்.
ஏப்ரல் 2022- ல், மாநில அரசு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றியது. மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் வேந்தராக ஆளுநரே உள்ள நிலையில், முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்திற்கான மசோதாவில் முதல்வர் வேந்தராக இருந்து துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சார்பு அதிகாரியாக இருப்பார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகம் நீட் அடிப்படையிலான சேர்க்கையைப் பின்பற்றுமா என்பது தொடர்பாக ஆளுநர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நாங்கள் உரிய பதில் அளித்தோம். செப்டம்பர் 17-ம் தேதி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பதிலளித்தோம். அந்த பதிலில், "நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதில் மாநிலம் வெற்றி பெறும் வரை நீட் அடிப்படையிலான சேர்க்கையைப் பின்பற்றுவோம் என்று கூறியிருந்தோம். எங்கள் பதில்கள் அவரது சந்தேகங்களைத் தீர்த்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் அவர் விரைவில் ஒப்புதல் அளிப்பார்" என்று நம்புகிறோம் என்றார்.
பல்கலைக் கழகம் அமைப்பதற்கான நிர்வாக அலுவலகம் அண்ணாநகரில் உள்ள சித்தா அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகம் கட்டுவதற்காக மாதவரத்தில் 25 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“