கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டம் நடைபெற்றபோதும், கீழ்வெண்மணிக்கு சென்று, பழனிவேலை ஆளுநர் ஆர். என். ரவி நேற்று சந்தித்தார்.
சி.பி.எம், வி.சி.க, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் ரவி, கீழ்வெண்மணிக்கு செல்வதற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். திருவாரூரில் சி.பி.எம் கட்சி தொண்டர்கள்,எம்.பி செல்வராஜ் ஆகியோர் ரயில்வே ஜங்ஷனில் கூடி கருப்பு கொடி ஏந்தி ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மகாத்மா காந்தியை குறித்து ஆளுநர் பேசியதற்கு கண்டனங்கள் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அவரை ஆர்.எஸ்.எஸ்-யின் ஏஜெண்டாக அவர் கீழ்வெண்மணிக்கு செல்கிறார் என்று கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறி, சாலையை தடுத்து, கோஷங்கள் எழுப்ப தொடங்கியதால், எம்.பி செல்வராஜ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர்.
கீழ்வெண்மணி கிராமத்தின் நுழைவு வாயிலில், சி.பி.எம் கட்சியின் நாகப்பட்டினம் செயலாளர் வி.மாரி முத்து, காங்கிரஸ் கட்சியின் நாகபட்டினம் மாவட்ட தலைவர் ஆர். என் அமிர்த்தராஜ் ஆகியோர் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தை தலைமையேற்று நடத்தினர்.
கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை ஆளுநர் சந்தித்தார். அவருக்கு மரியாதை செலுத்தினார். ஆளுநர் ஆர். என் ரவி மற்றும் சோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ சிறீதர் வேம்பு உடன் இணைந்து, பொரவாச்சேரியில் உள்ள ஆண்டவர் நர்சிங் கல்லூரியில் தமிழ் சேவா சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் பழனிவேல் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் “ கீவெண்மணி சம்பவம் நிகழ்ந்து 55 ஆண்டுகள் கடந்து, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலை மாறவில்லை. நம் மாநிலத்தின் தனிநபர் வருமானம் ரூ. 2.7 லட்சம் உள்ளது. நமது கிராமத்தில் சிலருக்கு ரூ. 40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.
சில மக்கள் அதிகம் பணம் படைத்தவர்களாக மாறுகின்றனர். சிலர் வறுமையை பற்றி பேசி, அதனால் பணக்காரார்களாக மாறுகின்றனர். பிரதமர் மோடியின் தலைமையில், 35 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். சில கிராமங்களை பார்க்கும்போது, மத்திய அரசின் திட்டங்கள் சரியாக மக்களுக்கு சென்று சேர்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ’ என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“