108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், ஸ்ரீ பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும், பல்லாயிரக்கணக்கன பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
இப்படி உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் என்று ஏதும் ஸ்ரீரங்கத்தில் இல்லாததால் பொதுமக்கள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/e71cd331-5cc.jpg)
திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில், 1 முதல் 7 வார்டுகளில் ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகள் அடங்கும். இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால், ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையங்கள் எதுவும் இல்லை. ஸ்ரீரங்கத்திற்கு வரும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது.
அதனால், ஸ்ரீரங்கத்தில் உள்ளுர் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசியல் கட்சிகளும் தொடர்ந்து தேர்தலின்போது வாக்குறுதி அளித்து வந்தன.
2021ல் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, ஸ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/b2060a3a-a8f.jpg)
அதன்படி, 2022-23 ஆம் ஆண்டுக்கான மூலதன மானிய நிதி ரூ.7.77 கோடி, மாநகராட்சி பங்களிப்பு ரூ.3.33 கோடி என மொத்தம் ரூ.11.10 கோடியில் இந்த புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து டெண்டர் உள்ளிட்ட நடைமுறை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. புதிய பேருந்து நிலையம் கட்டுமானத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய தகவல் குறித்து கேள்விப்பட்ட ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“