ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்த வட்டியில்லா கடன், 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஆடு, மாடு, மீன், கோழி ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவு கடன் 2023 - 24 நிதி ஆண்டில் 1,500 கோடி ரூபாய் வழங்கப்படும்.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வட்டியில்லா நடைமுறை மூலதன கடனுக்கு 1,500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களை அணுகி இந்த திட்டத்தின் கீழ் பலன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேளாண் கடன் அட்டை வைத்திருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வாங்கிக் கொள்ளலாம். கிராமம் தோறும் கூட்டுறவு சங்கங்கள் இருக்கும். அதன் மூலமாக ஆடு மாடு கோழி உள்ளிட்டவைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது ஆதார் எண் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்பித்து பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“