செவ்வாய்க்கிழமை முதல் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்பட்டாலும், சென்னை திரும்பும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனையடுத்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து அரசு விரைவுப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம், பொங்கல் பண்டிகை காரணமாக ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கி வந்தன.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும் என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது.
ஆனால் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திய பின்னரே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஜனவரி 25 ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் இயக்காமல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் சேவையை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதன்படி நேற்று முதல் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்போது தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு 77 ஆம்னி பேருந்துகள் நிற்கும் அளவிற்கு நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை தவிர 250 ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும். அதேநேரம் சென்னை வரும் பேருந்துகள் தாம்பரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும்போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், என்று தெரிவித்துள்ளார். இதனால் சென்னை வரும் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் தவிர, விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், நேற்று மாலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியற்ற முறையில் ஆம்னி பஸ்கள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடம் இருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.