Advertisment

2021 ஆம் ஆண்டு நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை

2021 new year celebrations :

author-image
WebDesk
New Update
2021 ஆம் ஆண்டு நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை

TN Bans Public parties on New Year : டிசம்பர் 31ம் தேதியன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.

Advertisment

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் டிச.31 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதுவன்றி, 2021 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, 31.12. 2020  அன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கொரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். எனினும், 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.

மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Coronavirus Happy New Year
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment