தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக கொரோன தொற்று வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால், மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலையால் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரொனா வைரஸ் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே ஒரே நாளில் பதிவான அதிகபட்சமாக பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கையாக இருந்துவந்தது. ஆனால், கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் மாநிலத்தில் தினசரி கொரொனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 15) ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 54,315 ஆக உயர்ந்துள்ளது. இது மாநில சுகாதாரத்துறைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்னன், “தமிழகத்திற்கு அடுத்து வரும் 2 வாரங்கள் முக்கியமானது. அதனால், மக்கள் அத்தியாவசியத் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று கூறினார்.
இதனிடையே, தமிழக அரசு, மாநிலத்திற்கு கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் கோவெக்சின் தடுப்புசிகளை வழங்கக் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாக தெரிவித்தது.
தமிழகத்தில், திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிக்கா உத்சவ் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று (ஏப்ரல் 16) தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது; சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, போன்ற மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"