மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனையடுத்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்றாலும், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிய 4 நாட்களுக்கு மேல் ஆனது.
இந்தநிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ரொக்கமாக வழங்கப்படும் நிவாரணத்தொகைக்கான டோக்கன் டிசம்பர் 16 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், டோக்கன் விநியோகம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அதன்படி டோக்கன் விநியோகம் இன்று முதல் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்கு அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். ரேசன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் வரி செலுத்துவோர் மற்றும் அரசுப் பணியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்காது. பட்டியலில் இடம் பெறாதவர்கள் ரேசன் கடையில் படிவம் பெற்று, உரிய ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்யலாம்.
மேலும் வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி முதல் ரூ.6000 நிவாரணத் தொகையை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ரூ.6000 நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க வேண்டும். ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும். டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும், மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“