தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வகையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 2.72 வரையிலும் உயர்கிறது.
எவ்வளவு உயர்கிறது: அதன்படி இரண்டு மாதத்துக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.27.50 (26.73 சதவீதம்), 300 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு 15.30 சதவீதமும் (ரூ.72.50), 500 யூனிட் வரை பயன்படுத்தும் நபர்களுக்கு ரூ.297.50ம், 600 யூனிட் வரை பயன்படுத்தும் நபர்களுக்கு (1.32சதவீதம்) ரூ.155 உயர்த்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரத்தை 63.35 லட்சம் வீடுகளிலும், 300 யூனிட்டுகள் மின் நுகர்வை 36.25 வீடுகளிலும், 400 யூனிட்கள் மின்நுகர்வை 18.82 லட்சம் வீடுகளிலும், 500 யூனிட்கள் மின்நுகர்வை 10.56 லட்சம் வீடுகளிலும் 600 யூனிட்களுக்கு மேற்பட்ட மின்நுகர்வு 3.14 லட்சம் வீடுகளிலும் காணமுடிகிறது.
ஒரே மின்கட்டணம்: அதேபோல் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரங்களில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.1,130 வசூலிக்கப்பட்டுவருகிறது. இதுவே மின்நுகர்வு 501 யூனிட் ஆக அதிகரிக்கும்பட்சத்தில் மின்கட்டணம் 58.10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.1,786 ஆக வசூலிக்கப்படுகிறது.
இதனை நீக்கி ஒரே மின்கட்டணமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சிறு குறு மின்நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வளாக மின்நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே மின்கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் கல்லூரிகளிலும் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 மட்டுமே உயர்த்தப்பட உள்ளது. விசைதறி தொழிலாளர்களுக்க 750 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல் 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடரும். இதனை தாமாக விட்டுக் கொடுக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நூலகங்களுக்கு புதிய முறை: கிராமப்புறங்களில் இருக்கும் நூலகங்களுக்கு மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.75 ஆகவும், நிலைக்கட்டணமாக மாதம் ரூ.60ம் வசூலிக்கப்படும்.
இணைய வழி கட்டணம்: அதேபோல் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் கட்டணம் உள்ளவர்கள் இணைய வழியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு உபயோகத்திற்கான மின் விநியோகத்தை பலமுறை பெறுவதை தடுக்க மின் இணைப்புக்கான விளக்குகள், மின்தூக்கி, நீர் வழங்கல் போன்ற அமைப்புகளுக்கு தனியாக விகிதப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், ஒரு வீட்டில் கூடுதலாக குத்தகைக்கு விடப்பட்டதை தவிர்த்து மற்ற கூடுதல் மின் இணைப்புக்கு மாதத்துக்கு ரூ.225 வசூலிக்கப்பட உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.