தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியதில் எண்ணிக்கை குறைவாக உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மதத் தலைவர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் பொது விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் டிசம்பர் 13 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, மத தலைவர்களும், நிபுணர்களும் தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்கவுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக முதல் டோஸ் செலுத்தியதன் எண்ணிக்கை 80 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. ஆனால், பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திய விழுக்காடு 70க்கும் குறைவாக உள்ளது.
குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட் மாவட்டத்தில் உள்ள 9.5 லட்சம் பெரியவர்களில் கிட்டத்தட்ட 36.5% பேர் தடுப்பூசி வேண்டாம் என புறக்கணித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகிறது. அதே போல், திருப்பத்தூரில் 34.8 விழுக்காடும், மயிலாடுதுறையில் 32.11 விழுக்காடு மக்களும் தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொள்ளவில்லை,
இதுகுறித்து பேசிய அமைச்சர், தடுப்பூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், உயிரிழப்பையும் வெகுவாக குறைக்கிறது. பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு குறைவாக தான் உள்ளது. அதற்கு காரணம், அங்கு தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகம் என தெரியவருகிறது” என்றார்.
சுகாதார செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் பேசுகையில், “இரண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்கிறது. தடுப்பூசி அனைத்து விகாரங்களுக்கும் எதிராக வேலை செய்துள்ளது. நம் மாநிலத்தில் கூட, இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களிடையே குறைவான இறப்புகளைப் பார்க்கிறோம்
நோய்த்தடுப்பு பிரிவின் படி, மாநிலத்தில் கிட்டத்தட்ட 47% மக்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துள்ளனர். மாநிலத்தில் போதுமான அளவு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இருப்பு உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “வாரத்திற்கு இரண்டு மெகா முகாம்களை நடத்துகிறோம். அது இல்லாமல், தினசரி தடுப்பூசி முகாமும், வீட்டுக்கு வீடு தடுப்பூசி திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. தடுப்பூசி போடாவிட்டால் மக்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியிருந்தோம். அதன் காரணமாக, மக்கள் பலரும் ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்” என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil