விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி.,யாக இருந்தவர் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங். இவர் மீது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பல்வீர்சிங் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சிங் உள்ளிட்ட 15 போலீசார் மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார். சில போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், பல்வீர் சிங் மீதான வழக்கு நெல்லையில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதேநேரம் பல்வீர் சிங் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த மாதம் 15 ஆம் தேதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பல்வீர் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாலும், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததாலும் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வீர் சிங் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி நீண்ட நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படக்கூடாது என்பதற்காக தற்போது அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“