/indian-express-tamil/media/media_files/XNSyOM7aBjoQiiq9ZGY0.jpg)
தமிழக அரசின் மழை வெள்ள நிவாரணம்; உரிய ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ 6000 வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக ரூ.6000 நிவாரணம் வழங்கி வரும் நிலையில், அதற்கான எஸ்.எம்.எஸ் உரியவர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த டிசம்பரில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனையடுத்து தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தலா ரூ.6000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. தற்போது தென் மாவட்டங்களில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் அல்லாமல் ரேசன் கடைகள் மூலம் நேரடியாக நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், நிவாரணத்தொகை பெற்றதற்கான குறுஞ்செய்தி சம்பந்தப்பட்ட ரேசன் அட்டைதாரரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு தொலைபேசி எண்ணும் அந்த குறுஞ்செய்தியில் இடம்பெற்றுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொகை செலுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்படுவதோடு, முறைகேடு நடந்திருந்தால் கண்டுபிடிக்கவும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us