மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா- கிராமின் (PMAY-G) மற்றும் இந்திரா ஆவாஸ் யோஜனா (IAY)ஆகிய திட்டங்களின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ‘பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்’ கீழ் ஒரே பயனாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்தார்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதியில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் கையாடல் செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார் மற்றும் டி.வி. தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் பிறப்பிக்க தேவையில்லை” எனக் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தல், தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில் கையாடல் நடப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இதை தீவிரமாக கருத வேண்டும். எனவே இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார் எனத் தெரிவித்தனர். மேலும், இது போன்று விதி மீறல்களில் ஈடுபட்டு தகுதியற்ற நபர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் வீடு ஒதுக்கீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்கவும், வேலை உறுதி திட்ட நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யவும் வருவாய் கோட்டாட்சியர் அந்தஸ்திற்கு இணையான அதிகாரியை நியமிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக வீடுகளை ஒதுக்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது என்று கூறினர். இந்த நடைமுறைகளை 6 மாதங்களில் முடித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil