குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து முடிந்து, குணமடைந்ததையடுத்து தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதேபோல செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றச்சாட்டு பதிவானாலும் அமைச்சராக நீடிக்க அரசியல் சட்டமோ, சட்டவிதிகளோ தடை விதிக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என தமிழக அரசு தரப்பு வாதிட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil