கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி கட்டடங்களை கட்டி வரும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல், விதிகளை மீறி பங்களா கட்டிவருவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்ச்சை எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிகளை மீறி பங்களா கட்டிவருவது குறித்து பேத்துப்பாறை ஊர்த் தலைவர் மகேந்திரன் புகார் அளித்தார்.
மேலும், வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், நடிகர் பிரகாஷ் ராஜ் 7 ஏக்கரும், பாபி சிம்ஹா ஒரு ஏக்கரும் நிலம் வாங்கியிருந்தனர். அந்த நிலத்தில் நடிகர்கள் இருவரும் விதிகளை மீறி பங்களா கட்டிவருகிறார்கள். அதேநேரம், கட்டட வரைபடம் கொடுத்து முறையான மின் இணைப்பு பெறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ், ஜேசிபி வைத்து கட்டட பணிகளை மேற்கொள்வதாகவும், பொதுப்பாதையை மறித்து சிமென்ட் சாலை அமைத்துள்ளதாகவும் பேத்துப்பாறை ஊர்த் தலைவர் மகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பாதையை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமிக்கவில்லை என அப்போது விளக்கம் அளித்தனர். அதேநேரம் அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டதா இல்லையா என்பது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த எஸ்.முகமது ஜூனத் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் போத்துப்பாறை. இந்த கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டி வருகின்றனர். கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின் படி முறையாக அனுமதி வாங்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க கட்டிட விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் பேத்துப்பாறை பகுதியில் பங்களா கட்டி உள்ளனர்.
இது தொடர்பாக புகார் அளித்தாலும் இருவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விதிமீறல் கட்டிடங்களால் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் கொடைக்கானல் பேத்துப்பாறையில் அரசின் அனுமதி பெறாமல் ஜே.சி.பி, பொக்லைன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்துள்ளார்கள். அரசின் அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டிய நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று எஸ்.முகமது ஜூனத் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கடந்த மாதம் நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பாபி சிம்ஹா தனது தாயார் பெயரில் 2400 சதுர அடிக்கு கட்டடம் கட்ட அனுமதி பெற்று 4000 சதுர அடி கட்டியிருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது இரு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, தமிழக அரசு சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகர்கள் பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் கட்டி வரும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிராம நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதியற்ற கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணை வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.