முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்த இரண்டு ரிட் மேல்முறையீட்டு மனுக்களை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2008 முதல் 2010-ம் ஆண்டு வரை புதிய சட்டமன்ற வளாகம் மற்றும் தலைமை செயலக வளாகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் டி.வி.ஏ.சி விசாரணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டது.
2011-ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தற்போது அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றபட்ட தலைமைச் செயலக வளாகத்தின் கட்டுமானத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி எஸ்.தங்கராஜ் ராஜினாமா செய்த பிறகு, விசாரணை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரகுபதியை 2011 டிசம்பர் 2ஆம் தேதி தமிழக அரசு நியமித்தது.
இதனிடையே, 2014ல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் ஆணையத்தின் அமைப்பை எதிர்த்து தனி நபர் ரிட் மனுக்களை தாக்கல் செய்து இடைக்கால உத்தரவு பெற்றனர். இருப்பினும், ஆகஸ்ட் 3, 2018 அன்று, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரணை ஆணையம் எந்த முன்னேற்றமும் அடையாததால், அதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி இறந்ததையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அப்போதைய அரசு, முறைகேடுகள் குறித்து டி.வி.ஏ.சி விசாரணைக்கு உத்தரவிட்டு செப்டம்பர் 24, 2018 அன்று அரசாணை வெளியிட்டது. ஸ்டாலினும், துரைமுருகனும் தலைமைச் செயலகம் கட்டும் போது முறையே துணை முதலமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றியதால், அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா (ஓய்வு பெற்றதிலிருந்து) ஸ்டாலின் மற்றும் துரைமுருகனின் ரிட் மனுவை ஏற்று டிசம்பர் 13, 2018 அன்று அரசாணையை ரத்து செய்தார்.
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டில் ரிட் மேல்முறையீட்டு மனுக்களை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர். சுண்முகசுந்தரம், திரும்பப் பெறுவதற்கான மேல்முறையீட்டு மனுக்களை பட்டியலிடக் கோரி, ஜூலை 13, 2023 அன்று, உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியதாகக் கூறினார்.
மேலும், 2023 ஜூலை 24 அன்று, முன்னாள் அ.தி.மு.க எம்.பி ஜெ.ஜெயவர்தன் அரசியல் உள்நோக்கம் காரணமாக இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் இடையே இருப்பதால், மேல்முறையீடுகளில் மூன்றாம் தரப்பினருக்கு இடமளிக்க உரிமை இல்லை என்றும் அட்வகேட் ஜெனரல் கூறினார். மேலும், மேல்முறையீட்டை மாநில அரசு திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
பின்னர், ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும் இதே கோரிக்கையை முன்வைத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதை நீதிமன்றங்களால் தடுக்க முடியாது என்று வாதிட்டார்.
பின்னர் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, செப்டம்பர் 26-ம் தேதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“