Advertisment

கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 2472 நர்சுகள் பணி நீக்கம்: தலைவர்கள் எதிர்ப்பு

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்டதால், தங்களின் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu govt terminates the services of 2400 nurses

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 மேலாண்மைக்காக தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் சேவைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை நிறுத்தியுள்ளது.

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (எம்ஆர்பி) மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதால், தங்கள் சேவைகளை முறைப்படுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தி வந்த கிட்டத்தட்ட 2,400 தொழிலாளர்களுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

2019 இல் அரசு தற்காலிக அடிப்படையில் கிட்டத்தட்ட 3,400 செவிலியர்களை நியமித்தது. இவர்களில் 2,472 செவிலியர்கள், தகுதி சுழற்சியின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அதே சமயம் 800 பேரின் சேவைகள் முன்னறிவிப்பின்றி இந்த ஆண்டு மார்ச் 31 அன்று நிறுத்தப்பட்டன. இதற்கு அரசியல் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல.

இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கிய போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 3200 செவியர்கள் நியமிக்கப் பட்டனர். அவர்களில் 800 பேர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், மீதமுள்ள 2400 செவிலியர்களையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றை கனிவுடன் பரிசீலிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு, 2400 செவிலியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.

சாதாரண காலங்களில் பணியாற்றுவதற்கும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கொரோனா காலத்தில் பணியாற்ற பலரும் முன்வராத காலத்தில், 3,200 செவிலியர்களையும் கட்டாயப்படுத்தி தான் தமிழக அரசு பணியில் சேர்த்தது. அவர்களும் கொரோனா காலத்தின் அச்சங்களையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டு பணியாற்றினார்கள். கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட போதும், மூன்றாவது அலை ஏற்பட்ட போதும் செவிலியர்களின் பணி தேவைப்பட்டதால் அவர்களின் ஒப்பந்தக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இப்போது நான்காவது அலை ஏற்படும் என்று அஞ்சப்படும் சூழலில் அவர்களை பணியில் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் எந்த வகையிலும் தகுதி, திறமை குறைந்தவர்கள் அல்ல. பணி நிலைப்பு செய்வதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு உள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் கடந்த 07.02.2019 அன்று வெளியிட்ட 02/MRB/2019 என்ற அறிவிக்கையின் மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் மூலமாக இட ஒதுக்கீடு, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. 3,600க்கும் கூடுதலான செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, மிகவும் ஆபத்தான கொரோனா பெருந்தொற்று காலத்தில் செவிலியர்கள் பணியாற்றியதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் அவர்களின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து விட்டு, அவர்களை காலியாக உள்ள இடங்களில் அமர்த்தி பணி நிலைப்பு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திறனற்ற திமுக

கொரோனா பெருந்தொற்று நம்மை ஆட்டிப்படைத்த காலத்தில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைத்து நோய் தொற்று உள்ளவர்கள் குணமடைய அயராது பாடுபட்டவர்களில் செவிலியர்களின் பங்களிப்பு அளப்பரியது.

கொரோனா பெருந்தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய செவிலியர்களுக்கு தற்காலிக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் 14000 ரூபாய் மாத சம்பளத்திற்கு சுமார் 6000 செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கான ஆணை கொரோனா தொற்று பெருகிவந்த காரணத்தால், 31-12-2022 வரையில் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 356ல், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்குமுன் பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் போராட்டம் நடத்தியபோது, பணி நிரந்தரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் “விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

புத்தாண்டு தினத்தன்று பணி நிரந்தர ஆணை வரும் என்று எதிர்பார்த்திருந்த 6000 செவிலியர்களுக்கு இடியாக வந்து இறங்கியது சுகாதாரத்துறையின் அரசாணை. 31.12.2022க்கு பிறகு தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்படாது என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றுவார்களா என்ன?

தங்கள் உயிரை துச்சமாக கருதி பணிசெய்த செவிலியர்களுக்கு திறனற்ற திமுக அரசு கொடுத்த புத்தாண்டு பரிசை பாருங்கள்.

உடனடியாக 6000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்காக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேவநாதன் யாதவ்

தேவநாதன் யாதவ் விடுத்துள்ள அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்கள் உள்ளபோதும் இவர்களை கொண்டு நிரப்பாமல், அவர்களை பணிநீக்கம் செய்திருப்பது அதிகார ஆணவத்தின் உச்சம். உடனடியாக ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அவர்களை பணிநிரந்தரம் செய்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment