தமிழக சட்ட பேரவையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் ‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய, மத்திய அரசை நாடுவதாக தெரிவித்தார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய மனித நேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி, ”மியூசிக்கல்லி டிக் டாக் செயலி மூலமாக ஆபாசமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வழி வகுக்கும் இந்த டிக் டாக் செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இன்றைய செல்ஃபோன் யுகத்தில் வாடிக்கையாளர்கள் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது ‘டிக் டாக்’ செயலி. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஃபோன்களில் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி தான் தற்போதைய இளைஞர்களின் பொழுது போக்கு அம்சம். தமிழகத்தில் கணிசமான அளவிலும், இந்தியாவில் ஏராளமானோரும் இந்த செயலிக்கு அடிமையே ஆகிவிட்டனர். ஒருவர் மிகச் சிறிய வீடியோவில் ஆரம்பித்து, பல வகைகளில் இந்த செயலியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். திரைப்பட வசனங்களில் தொடங்கி மிக நீண்ட அரசியல் வாதியின் உரை வரை, நம்முடைய முக பாவனைகளை அவற்றுடன் இணைத்து லைக்ஸ் குவிக்க முடியும்.
இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அன்சாரி, “இந்த டிக் டாக் செயலி கலாச்சார சீரழிவு ஏற்படுத்துவதாக பல பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் என்னிடம் கூறினார்கள். சவுதி அரேபியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் மொபைல் ஆப் பயன்படுத்துவதற்கென்று வரைமுறைகள் இருக்கின்றன. ஆபாசமான முறையில் வீடியோ மற்றும் பாடல்களை தான் டிக் டாக்கில் காண முடிகிறது. இந்தியாவுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. இதனால் பல பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதனால் இந்த டிக் டாக் ஆப்பை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்றார்.
”டிக் டாக் ஆப், புதிய படங்களின் பாடல்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுகளை வைரலாக்குகின்றன. கீதா கோவிந்தம் திரைப்படத்தின் ’இன்கெம் இன்கெம் இன்கெம் காவாலே’, மாரி 2-வின் ‘ரவுடி பேபி’ ஆகிய பாடல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, நாம் தமிழர் கட்சியின் சீமான், பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் ஆகியோரது பேச்சுக்களை டிக் டாக் செய்து, வெளியிட்டு வைரலாக்குகிறார்கள்” என்கிறார் சோனியா அருண்குமார் எனும் சமூக வலைதள பயன்பாட்டாளர்.
டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்பதைக் கேள்விப்பட்டதும் முதலில் மகிழ்ந்தது தமிழிசை தான். “அந்த ஆப் தடை செய்யப்பட்டால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான் தான். இந்த ஆப் என்னைப் போன்றவர்களை மிகுந்த கேலிக்குள்ளாக்குகிறது. பொழுது போக்குக்காக உருவாக்கப்பட்ட இந்த செயலி தற்போது எல்லை மீறி சென்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடை செய்ய நடவடிக்கை எடுத்தால் நான் அதை வரவேற்பேன்” என தனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறார் தமிழிசை.
ஆனால் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கேலி செய்கிறது. ”தனி நபர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தான் அந்த ஆப். தங்களுடைய வீடியோவை அவர்கள் பதிவேற்றம் செய்கிறார்கள். அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், பார்க்காதீர்கள். உங்களுடைய மதிப்பீட்டிற்குள் வருகிறதா எனப் பார்த்தால், பிறகு அனைத்தையும் தடை செய்ய வேண்டியது தான். இந்த பயன்பாடு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், அதை தடை செய்வதற்கு பதில் அதற்கான சட்டங்களை இயற்றுவோம்”ன் என்கிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு.