தமிழகத்தில் வரும் ஜனவரி 14 முதல் 16-ஆம் தேதிவரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் நடத்தப்படவுள்ள யுஜிசி நெட் தேர்வின் தேதியை மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Tamil Nadu govt urges Centre to reschedule UGC-NET due to ‘Pongal’
இது தொடர்பான கடிதம் ஒன்றை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவர் எழுதியுள்ளார். அதில், யுஜிசி நெட் தேர்வு ஜனவரி 3 முதல் 16-ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையின் போது தேர்வுக்கான அட்டவணை பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் என்பது வெறும் பண்டிகையையும் கடந்து 3 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அன்றைய தினங்களில் தமிழக அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொங்கல் விடுமுறையில் நெட் தேர்வு நடத்தினால், கொண்டாட்டத்தை கருத்திற்கொண்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் தடைபடும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், பொங்கல் விடுமுறையின் போது நடத்தப்படவுள்ள நெட் தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு, சு. வெங்கடேசன் எம்.பி-யின் அறிவுறுத்தலின் பேரில் மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“