தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டுவருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தமிழக அரசு ஏன் நமது பாரம்பரிய சித்தமருத்துவத்தின் பக்கம் கவனத்தை திருப்பவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கடந்த அண்டு மார்ச் இறுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுக்கத் தொடங்கியபோது, இந்த கொடிய கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்ற சூழல் நிலவியதால் மருத்துவர்களும் மக்களும் அரசும் அச்சம் அடைந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கில் முடங்கியது. ஆனால், நமது சித்த மருத்துவர்கள் கொரோனாவை தைரியமாக எதிர்கொள்ள கபசுரக் குடிநீரை பரிந்துரைத்தார்கள். கபசுரக் குடிநீரால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்ததை அனுபவப் பூர்வமாக அறிந்த தமிழக அரசும் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வழங்க உத்தரவிட்டது. ஆனால், கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்ட சூழலில், கொரோனா வைரஸ் 2வது அலை வேகமெடுத்து பரவிவரும் நிலையில் அரசும் சுகாதாரத்துறையும் சித்தமருத்துவத்தில் ஆர்வம் காட்டாதது தெளிவாகத் தெரிகிறது.
இதற்கு முன்பு, தமிழகத்தில் சிக்குன் குன்யா, டெங்கு போன்ற காய்ச்சல் மக்களை பாதித்தபோது, அப்போது சித்த மருத்துவம்தான் அரசுக்கு கைகொடுத்தது. நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. அரசு பொது மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கி பயிற்சி பெற்ற மருத்துவர்களை நியமித்தார். இந்த கட்டமைப்பு கொரோனா முதல் அலை பரவலின்போது தமிழக சுகாதாரத்துறைக்கு பெரிதும் உதவியது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் முதல் அலையின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க தனி பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டது. அங்கே அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவர் வீரபாபு போன்ற மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து மேற்பார்வையிட்டனர். சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட 1000 பேர்களில் அனைவருமே குணமடைந்தனர். சித்த மருத்துவத்தின் பலனை நேரடியாக பார்த்த தமிழக அரசு, சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி மூலம் வீடுவீடாக கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மக்கள் பலர் தாங்களாகவே கபசுரக் குடிநீரை அருந்தினார்கள்.
இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் பதிவாகி வருகிறது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் பெருகியுள்ளதால் சுகாதாரத்துறைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இப்போதும் தமிழக அரசு சித்த மருத்துவத்தின் பக்கம் கவனத்தை திருப்பவில்லை.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிசாமி என கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகளை எடுத்து அதிகாரிகளை முடுக்கிவிட்டனர். தமிழகத்தில் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்து மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், தமிழகத்தில் காபந்து அரசு இருப்பதால், முதல்வர் பழனிசாமி அனைத்து கட்சி கூட்டம் போன்ற முக்கிய விஷயங்களை மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர்தான் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால், முக்கிய முடிவுகளை துணிந்து எடுப்பதில் தயக்கம் உள்ளதும் தெரிகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுபடுத்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதில் அரசு நிர்வாகம் கவனத்தை செலுத்தி வருகிறது. அதே நேரத்தில், தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் முதல் அலையின்போது மேற்கொள்ளப்பட்டதுபோல, இந்த முறையும் சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்பைப்போல, சித்த மருத்துவ சிகிச்சையை உடனடியாக பயன்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ மையங்களை இதில் பெரிய அளவில் பயன்படுத்திகொள்ளலாம்.
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தான் மரணத்தின் விளிம்பு வரை சென்று சித்த மருத்துவத்தால் உயிர்பிழைத்ததை தெரிவித்துள்ளார். சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சித்த மருத்துவத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ் மருத்துவத்தின் பயன்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல தமிழ் மருத்துவத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் மே 2ம் தேதிக்கு பிறகு ஆட்சிக்கு வருபவர் யாராக இருந்தாலும், வருமுன் காப்போம் என்ற பொன்மொழிக்கேற்ப கொடும் நோய் தொற்றை தடுக்க தமிழ் பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் முன்னெடுத்து செல்வது அவசியமானது.
தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்காவிட்டால் யார் முன்னெடுப்பது? கடுந்தொற்று காலத்திலும் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை சொல்லி மக்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல், தமிழ் பாரம்பரிய மருத்துவமுறைகளின் மகத்துவத்தையும், பெருமையையும் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. இதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும்.
சித்தர்களின் தமிழ் மருத்துவக் களஞ்சியங்களை ஓலைச்சுவடிகள் வழியாக வழங்கி அருந்தொண்டாற்றும் தமிழ் வளர்ச்சித் துறையோடு இணைந்து தமிழ் மருத்துவத்துறைக்கு தனியாக அமைச்சகம் அமைக்கவும் அரசு ஆவண செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பலனை தமிழக அரசு நேரடி அனுபவம் மூலமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அறிந்துள்ள நிலையில், தமிழருவி மணியன் போன்ற பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இனியாவது, தமிழக அரசு சித்த மருத்துவத்தை மீண்டும் முழுவீச்சில் பயன்படுத்துமா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”