Gutkha Scam Case Live Update: குட்கா ஊழல் நடந்தது எப்படி? இதில் யார், யாருக்கு தொடர்பு? என்கிற விவாதங்கள் சூடு பிடித்திருக்கிறது. இந்தச் சுழலில் அது தொடர்பான சிபிஐ சோதனையில் சிக்கியவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஐபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பரபரப்பான புகார்களை சுமத்தினார்.
குட்கா ஊழல், தமிழ்நாடு அரசியலை உலுக்கி வருகிறது. 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தனர் என்பதுதான் இதில் குற்றச்சாட்டு!
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் குட்கா குடோனில் 2016-ம் ஆண்டு மத்திய வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோத குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது? என்கிற குறிப்புகள் கிடைத்தன. குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் இது தொடர்பாக வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.
குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலேயே செப்டம்பர் 5-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஐபிஎஸ் (ஓய்வு) ஆகியோரின் இல்லங்கள் உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குட்கா ஊழல் தொடர்பாக குடோன் உரிமையாளர் மாதவ ராவ் மற்று அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேரை நேற்று சிபிஐ கைது செய்தது. உயர் அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தெரிகிறது.
Tamil Nadu Gutkha Scam Live Update: குட்கா ஊழல் தொடர்பான லைவ் செய்திகள் இங்கே:
3:40 PM: குட்கா விவகாரம் தொடர்பாக அப்போதைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை அளிக்காதது ஏன்? எனக்கு கீழ் பணியாற்றிய அனைவரிடமும் கடுமையாக நடந்து, பணியை சிறப்பாக செய்ய அறிவுறுத்தியுள்ளேன். - ஜார்ஜ் ஐபிஎஸ்
3:33 PM: குட்கா விவகாரத்தில் எனது வீட்டில் இருந்து எதையும் போலீஸார் கைப்பற்றவில்லை. அரசு அளித்த பத்திரங்கள், காப்பீடு பத்திரங்கள் ஆகியவற்றையே எடுத்துச் சென்றிருக்கிறார்கள்- ஜார்ஜ் ஐபிஎஸ்
3:30 PM; குட்கா விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை. என்னால் முடிந்த அளவு அதை தடுக்க முயன்றேன் என்றும் ஜார்ஜ் கூறினார்.
3:25 PM: ஜார்ஜ் ஐபிஎஸ் பேட்டி ஆய்வாளர் முதல் கூடுதல் ஆணையர் வரையிலான இதர அதிகாரிகளை குற்றம் சாட்டும் தொனியில் இருந்தது. ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு துணை ஆணையராக பணியாற்றிய ஜெயகுமார் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நேரடியாக குற்றம் சாட்டினார். தனக்கு முன்னால் பொறுப்பில் இருந்த ஆணையர்களின் பட்டியலையும் வாசித்தார்.
இதனால் சிபிஐ தரப்பு சாட்சியாக அவர் மாறுகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்தது.
3:10 PM: நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறி வைக்கப்படுகிறோம்- ஜார்ஜ் ஐபிஎஸ். பரபரப்பான தனது பேட்டியை நிறைவு செய்தார் ஜார்ஜ் ஐபிஎஸ்!
3:05 PM: கிறிஸ்துமஸ் பண்டிக்கையின்போது ரூ 15 லட்சம் பெற்றதாக உள்ள புகாரை நிருபர்கள் எழுப்பியபோது, ‘நான் ஒரு கிறிஸ்டியன்’ என ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார் ஜார்ஜ். ‘நீங்க ஒரு முஸ்லிம்’ என ஒரு செய்தியாளரை நோக்கி ஜார்ஜ் கூறியதும், செய்தியாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
3:00 PM: உளவுப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த வரதராஜூவுக்கு குட்கா ஊழல் பற்றி ஏன் தெரியவில்லை? 300-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ள சென்னையில் கமிஷனரின் ஆதரவுடன் எல்லாம் நடந்து விடுமா? துணை ஆணையர் ஜெயகுமார் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அவருக்கு பதவி உயர்வுக்கான கோப்பில் குறைந்த மதிப்பெண்களை இட்டேன் - ஜார்ஜ் ஐபிஎஸ்
2:55 PM: 2016-ல் உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த வரதராஜூவிடமும் குட்கா விற்பனை குறித்துக் கேட்டேன். 3-வது முறையாக கமிஷனர் ஆனபோது கூடுதல் ஆணையர் நல்லசிவத்திடம் இது குறித்து கேட்டேன் - ஜார்ஜ் ஐபிஎஸ்
2:51 PM: குட்கா விவகாரம் எனது கவனத்திற்கு வந்தபோது விசாரணை நடத்த வேண்டும் என்றேன். மாதவரம் துணை ஆணையராக இருந்த விமலாவை அழைத்து இது குறித்து விசாரித்தேன். அவர் அப்படி எதுவும் நடக்கவில்லை என அறிக்கை அளித்தார்- ஜார்ஜ் ஐபிஎஸ்
2:50 PM: எனது வீட்டில் சோதனை நடத்தியது துரதிருஷ்டவசமானது. கிரிமினல்கள் வெற்றுக் காகிதத்தில் எழுதிய தகவல்கள் அடிப்படையில் சோதனை நடந்திருக்கிறது- ஜார்ஜ் ஐபிஎஸ்
2:43 PM: திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் என் பெயர் இல்லை, எஃப்.ஐ.ஆர்-லும் என் பெயர் இல்லை-ஜார்ஜ் ஐபிஎஸ்
2:40 PM: குற்றம் சாட்டப்பட்ட காலகட்டத்தில் நான் சென்னை மாநகர ஆணையராக இல்லை என கூறிய ஜார்ஜ் ஐபிஎஸ், 33 ஆண்டுகள் புகாருக்கு இடமளிக்காமல் செயல்பட்டதாக குறிப்பிட்டார்.
2:30 PM : ஜார்ஜ் ஐபிஎஸ் பேட்டி தொடங்கியது. தவறான தகவல் அடிப்படையில் தன் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக ஜார்ஜ் கூறினார். ஆங்கிலத்தில் தனது பேட்டியை தொடர்கிறார் ஜார்ஜ்.
2:20 PM : ஜார்ஜ் ஐபிஎஸ் கூறும் தகவல்கள் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோருக்கு சிக்கலை உருவாக்கலாம் என தெரிகிறது.
2:00 PM: குட்கா ஊழல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 2016-ம் ஆண்டு சென்னை மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜ், ஒரு கடிதத்தை அரசுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் குட்கா உரிமையாளர்களிடம் சிக்கிய ஆவணங்களில் ஜார்ஜ் பெயரும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டதை தொடர்ந்தே அவர் விசாரணை வளையத்தில் சிக்கினார்.
1:45 PM : குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ ரெய்டில் சிக்கியவர்களில் சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஐபிஎஸ்.ஸும் ஒருவர்! பரபரப்பான இந்தச் சூழலில் ஜார்ஜ் ஐபிஎஸ் சென்னை நொளம்பூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று (செப்டம்பர் 7) பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.