Advertisment

உலகின் தலைசிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா; கோவை நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

நமது ரிஷிகள் இந்த உலகில் உள்ள மனிதர்கள் மட்டுமின்றி செடி, கொடி, விலங்கினம் என அனைத்தும் ஒரே குடும்பம் என கூறியுள்ளனர்; கோவை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

author-image
WebDesk
New Update
RN Ravi at Kovai

கோவை நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்

G20 மாநாட்டின் ஒரு பகுதியாக CIVIL 20 SUMMIT - C20 கருத்தரங்கம், கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அம்ரிதா கல்வி நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது.

Advertisment

‘Technology and Security for One world' என்ற தலைப்பில் நடைபெற இக்கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தோனேசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கலந்து கொண்டு தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் மாற்றம்: சென்னை மாநகராட்சி புதிய கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, ”சுற்றுச்சூழல் சார்ந்து சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகளும் சவால்களும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலநிலை மாற்றம் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இவற்றோடு ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் கண்டு வருகிறோம். எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்களும் உண்டு.

publive-image

இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்தும் இந்த வேலையில் உலக அளவிலான கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களது கருத்துக்களை பெறும் வகையிலும் சிவில் 20 எனும் இது போன்ற மாநாடு நடத்தப்படுகிறது. உலக அளவிலான பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு காணும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த உலகில் உள்ள அனைவரும், அனைத்து உயிரினங்களும் ஒரே குடும்பம் என்கிற மேம்பட்ட சிந்தனையை நமது கலாச்சாரம் முன்னிறுத்தி வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு ரிஷி அரவிந்தரும் இதையே கூறினார். தமிழில் இதை யாதும் ஊரே யாவரும் கேளிர் என குறிப்பிடுகிறோம்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு பல்வேறு கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டன. அவை அனைத்தும் தாம் தான் சிறந்தவை என கூறப்பட்டது. ஆனால் நமது ரிஷிகள் இந்த உலகில் உள்ள மனிதர்கள் மட்டுமின்றி செடி, கொடி, விலங்கினம் என அனைத்தும் ஒரே குடும்பம் என கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே இப்போது உலகின் வழிகாட்டியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் சுமார் 150 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இது 'வசுதேவ குடும்பம்' எனும் இந்தியாவின் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தடுப்பூசியை வியாபாரம் ஆக்காமல் உயிர்களை காப்பாற்ற இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இதற்கு முந்தைய அரசாங்கங்கள் அரசு சார்ந்த வளர்ச்சி எனும் முறையை பின்பற்றி ஆட்சி செய்து வந்தன. இதனால் மருத்துவம், கல்வி, வறுமை ஆகியவற்றை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடி அவர்களின் உன்னத ஆட்சியில் மக்களை மையமாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மருத்துவம், கல்வி, பெண் பாதுகாப்பு அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், எரிவாயு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றோடு வளர்ச்சிக்கு தடையாக உள்ள பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதும் டிஜிட்டல்மயம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது திட்டத்தின் வெற்றி குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண காய்கறி கடைக்காரர் வரை டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு விற்பனை செய்து வருகிறார். உலகில் தலை சிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

publive-image

ஜன் தன் யோஜனா எனும் பிரதமரின் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு அரசின் பயன்கள் எந்த இடைத்தார்கள் இன்றி நேரடியாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் வெளிப்படை தன்மையான அரசாங்க நிர்வாகத்தை காட்டுகிறது.

கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் தடுப்பூசி செலுத்தியதும் உடனடியாக அதற்கான சான்றிதழ் தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்டு நம்மால் பயணம் செய்ய முடிந்தது. அதேபோல் அடுத்த தவணைக்கான தகவலும் தொழில்நுட்ப உதவியோடு நினைவுபடுத்தப்பட்டது.

கோவிட் பெருந்தோற்றால் செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருந்த நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியோடு அனைத்து மக்களுக்கும் உணவு விநியோகிக்கப்பட்டது. தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எவரும் தமிழ்நாட்டிலோ கேரளத்திலோ ரேஷன் அட்டை சிக்கல் இல்லாமல் உணவுப் பொருட்களை பெற முடிகிறது. இதேபோல் ஆதார் உட்பட அனைத்து சேவைகளும் முற்றிலுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றத்தைப் பொறுத்தவரை பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்கள் மீதான தாக்குதல் குறிப்பாக கேரளாவில் பெண்கள் காணாமல் போவது உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. தற்போது பெண்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். மக்கள் தொகை எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். பெண்களுக்கான பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, அனைத்தும் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்றால் ஒரு புறம் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் உள்ளன. அவற்றை நாம் அதே தொழில்நுட்பத்தோடு கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான கருத்துக்களை பகிரும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு சார்ந்த கருத்துக்களை பல்வேறு வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இவை அனைத்தும் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளும் சர்வதேச நாடுகள் தங்களது கொள்கைகளை வகுப்பதற்கு உதவியாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியோடு இந்த உலகின் தாவரங்கள், விலங்குகள் உட்பட அனைவரும் ஒரே குடும்பம் என்கிற எண்ணத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஆளுநர் உரையாற்றினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment