தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ள இடத்தின் அடிப்படையில், அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்வதற்கு முன்னரே, மிக கனமழை பெய்து வருகிறது. வழிமண்டல சுழற்சி தீவிரமடைந்து விட்டதால், இன்றைய தினமே மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 294 சதவீதம் அதிகளவில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி நகருவதற்கு முன்னரே, வழிமண்டல சுழற்சியால் சென்னையில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 0.4 செ.மீ தான். ஆனால், தற்போது 1.8 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 294 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 1 முதல் 15-ஆம் தேதிவரை சுமார் 7 செ.மீ மழை பெய்ய வேண்டிய சூழலில், 12 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 84 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னையில் 7.7 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 12 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 81 சதவீதம் அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. கோவையில் மொத்தம் பெய்ய வேண்டிய மழையின் அளவு 7 செ.மீ. ஆனால், 19 செ.மீ மழை பெய்து, இயல்பை விட 179 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் 120 சதவீதம், காரைக்காலில் 122 சதவீதம், கரூரில் 188 சதவீதம் அதிகளவு மழை பதிவாகியுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பெய்த மழையும் வடகிழக்கு பருவமழையாக தான் வானிலை ஆய்வு மையம் கணக்கில் எடுத்துக் கொள்ளும். அதன்படி, வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே நடப்பு ஆண்டில் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.