அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை முதல் ஷிப்ட், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்ட், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மூன்றாவது ஷிப்ட் என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் ஷிப்டில் 50 சதவீத பணியாளர்கள், மற்ற இரண்டு ஷிப்ட்களில் தலா 25 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.” இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம்-2, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் இனி பணி அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“