சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எந்தவகையான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கோடை வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேவையான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க, இந்த வெயிலின் அதீத தாக்கத்தால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், மாரடைப்பைப் போன்று இதுவும் அதிக பேராபத்தை ஏற்படுத்தும், என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனிடையே இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம், மே 4 ஆம் தேதி தொடங்கியது,
இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, எவ்வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கட்டுமான தொழிலாளர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, மே மாதம் இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும், என தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“