வங்கக்கடலிலல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களுக்கு நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழ்நாடு- இலங்கை கடலோரத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்ற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்தம் தீவிரமடைந்து வருவதால், நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை,கடலூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் பாம்பன், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளச்சல் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களாக இருக்கும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 26) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (நவம்பர் 27) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை எதிர்பார்க்கிறோம் எதிர்பார்க்கவில்லை என்பது வேறு. எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாளை தமிழகம்- புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என சென்னை மண்டல ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் புதுச்சேரி பகுதி மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும், நாளை (செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து புதுச்சேரி மீன்வளதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் கடலில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் இன்று திங்கட்கிழமை கரை திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்லவில்லை. ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் மீண்டும் திரும்பி வருகின்றனர். மீன்வளத்துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறை 24x7 முழு நேரமும் இயங்கி வருகிறது. எனவே மீனவர்கள் அவசர உதவிக்கு 0413-2353042 என்ற எண்ணிலோ அல்லது அவசர கால செயல் மையத்தின் டோல்பிரீ எண் 1070 மற்றும் 1977 தொடர்பு கொள்ளலாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.