தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.அணைகள், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், உபரி நீர் அதிகளவில் திறக்கப்படுவதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்யும் என சென்னைக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துளளது.
வானிலை மையம் தகவலின்படி, தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன்படி, இன்று காலை தமிழக கடற்கரை பகுதியை நெருங்கும் என்றும், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையைக் காரைக்காலுக்கும் ஹரிகோட்டாவுக்கு இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நவம்பர் 13-ம் தேதி கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையைக் கடப்பதால், சென்னை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோவை, நீலகிரி, நாமக்கல், காரைக்கால் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை இரவு 8:30 மணி வரை நிலவரப்படி, எண்ணூர் துறைமுகத்தில் அதிகபட்சமாக 45 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் 33.5 மி.மீ, எம்ஆர்சி நகர் 29 மி.மீ, தரமணி 23.5 மி.மீ, மீனம்பாக்கம் 20 மி.மீ, அண்ணா பல்கலைக்கழகம் 28 மி.மீ, மேற்கு தாம்பரத்தில் 13 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.