424 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தவில்லை என கூறி சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழக வருமான வரியை முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அந்தவகையில், கடந்த 2017-2018 நிதியாண்டு முதல் 2020- 2021 நிதியாண்டு வரையில் இருந்து செலுத்த வேண்டிய ரூ.424 கோடி வருமான வரியை சென்னை பல்கலைக்கழகம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்த வரியை வசூலிக்கும் நடவடிக்கையாக பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருக்கும் 37 கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளை முடக்கும்படி வருமான வரித்துறை பாரத ஸ்டேட் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.
வரி செலுத்த வருமான வரித்துறை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், வரி செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வருமான வரித்துறை சார்பில் 3 முறை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு உரிய வகையில் விளக்கத்தை சென்னை பல்கலைக்கழகம் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து வங்கி கணக்குகளை முடக்க வருமான வரித்துறை வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த வங்கி கணக்குகள் மூலமாகத்தான் பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வங்கிக் கணக்குகள் மூலமே ஊதியம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் மின் கட்டணம், வாகன பராமரிப்பு மற்றும் பெட்ரோல் நிரப்புதல் போன்றவற்றுக்கும் வங்கிக் கணக்கு தேவையாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தை நடத்த ஒவ்வொரு மாதமும் சுமார் 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் இந்த பணபரிவர்த்தனைகள் எதையுமே பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கத்தில், “வரி கட்டாததும், காலதாமதம் ஆனதும் உண்மைதான். இதனால் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். கால நீட்டிப்பு கோரி வருமான வரித்துறையிடம் தமிழக அரசின் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மாணவர்களின் நலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், மாணவர்களின் நலன் நிச்சயமாக காக்கப்படும், யாரும் கவலை அடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“