தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரிகளுடன் திங்கட்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் வீரராகவ ராவ், அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட் குழு உறுப்பினர் ஐ.பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்ததாவது; அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயர் கல்வித்துறையில் என்னென்ன மேம்பாடுகள் கொண்டு வரலாம் என ஆலோசிக்கப்பட்டது. உயர்கல்வியில் இந்தியா 27 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு உயர்கல்வியில் 50 சதவீதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது.
நிதி பற்றாக்குறை என்பது இந்தியா முழுவதும் உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் நிதி பற்றாக்குறையும், சிலவற்றில் போதுமான நிதியும் உள்ளது. தமிழக பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும்.
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பதவிகளுக்கு ஆளுநரும், முதலமைச்சரும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பர். சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளது.
ஆளுநருடன் பிரச்சனை இல்லை. சில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது, அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுநருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அண்ணா நினைவு நாளில் கலந்துகொண்டதால் தான் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. அரசியல் ரீதியாக உள்ள கருத்துக்கள் தவிர, நிர்வாக ரீதியாக நல்ல கருத்துக்களை ஆளுநர் கூறினால் நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம். சபாநாயகர் ஆளுநரிடம் சட்டமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரும் வருவதாகக் கூறி இருக்கிறார்.
கல்லூரி கல்வித்துறைக்கு 4000 பேர் வரை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் நல்ல நிலையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 25 பொறியியல் கல்லூரிகள் மோசமான நிலையில் மூடக்கூடய சூழ்நிலையில் உள்ளது. அவற்றை மூட வேண்டுமா என்பது குறித்து சிண்டிகேட் முடிவெடுக்கும்.
தேசிய கல்வி கொள்கையில் நல்ல விசயங்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும். மாநில கல்வி கொள்கை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு முதல்வர் தலைமையில் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்கப்படும். வரும் கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆளுநர் பரிந்துரைத்தாலும், தமிழ்நாடு அரசின் முடிவே இறுதியானது. நிச்சயம் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.