தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இந்தி திணிப்பு மற்றும் எதிர்ப்பு போராட்டம் வலுவடைந்து வருகிறது. டுவிட்டரில், ” ஹிந்தி தெரியாது போடா” என்ற ஹேஸ்டேக், செப்டம்பர் 6ம் தேதி, தேசிய அளவில் டிரெண்டிங் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கே.பாலசந்தர் இயக்கத்தில் 1980ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் இடம்பெற்ற “I am a Tamil speaking Indian” என்ற வசனத்தை, நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ” I am an Indian. I don’t speak Hindi” என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
நெட்டிசன்களின் இந்தி எதிர்ப்பு கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இத்தகைய வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்களை அணிந்தபடியான போட்டோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
திருப்பூர் பனியன், டி-சர்ட் உற்பத்தியாளர்களும் இதுபோன்ற தமிழ் வாசகங்களுடனான டி- சர்ட்களுடன் தொடர்பு எண்ணையும் சேர்த்து அச்சடிக்க திட்டமிட்டுள்ளனர்.
புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு, சென்னை விமான நிலையத்தில் எம்.பி. கனிமொழிக்கு சிஆர்பிஎப் வீரர், இந்தி தெரியாமல் இந்தியரா என்று இழிவுபடுத்திய நிகழ்வுகள், தற்போது இந்த இந்தி எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
தேசிய விருது பெற்ற கோலிவுட் இயக்குனர் வெற்றிமாறன், 2011ம் ஆண்டில் இந்தி தெரியாததன் காரணமாக 45 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டதாக சமீபத்தில் கூறிய நிகழ்வு, இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கிற்கு உள்ளாக்கியுள்ளது.
ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனதன் பின்னணியில் திமுக இருப்பது தெரியவந்தநிலையில், பாரதிய ஜனதா கட்சியும் அதன் தோழமை கட்சிகளான அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தோர், “#DMK venaam poda” என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil