கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கருணாபுரம் பகுதியில் உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விஷ சாராயம் விவகாரம் குறித்து உள்துறை முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில், உள்துறை முதன்மை செயலாளர் அமுதா கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பின்னர் கருணாபுரம் அரசு பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன், உள்துறை செயலாளர் அமுதா ஆலோசனை நடத்தினார். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைக் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும், தாய் – தந்தையை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்தும் உள்துறை செயலாளர் அமுதா ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தப் பகுதியில் கள்ளச்சாராயத்தால் ஏன் அடிக்கடி மரணம் ஏற்படுகிறது? இங்கு எப்படி விற்பனையாகிறது? தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“