/indian-express-tamil/media/media_files/2025/02/19/5FMHudQ7aukGkyxyPFC4.jpeg)
திருச்சி வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் பங்கேற்றது தி.மு.க அரசின் சாதனை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரை ஓட்டியுள்ள புகழ்பெற்ற கோவில்களில் முருகன் கோயில் என்றால் அது வயலூர் முருகன் கோவில் தான். அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் தான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில் உள்ளது.
இந்நிலையில் வயலூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வரால் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்கள் பிரபு மற்றும் ஜெயபாலன் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சகல விமானங்கள், ராஜகோபுரங்கள், கும்பாபிஷேகமும், காலை 9.50 மணிக்குள் மூலாலய மஹா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வயலூரா.. வயலூரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேக விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 2 அர்ச்சகர்களும் குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது குறித்து அமைச்சர் சேகர்பாபு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்; திருச்சி, வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், பணி நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் ஜெயபால், பிரபு ஆகியோர் யாகசாலை பூஜை மற்றும் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்திய நிகழ்வுகளில் பங்கேற்றது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் இமாலய வெற்றியாகும். திராவிட மாடல் அரசின் இச்சாதனைகளால் மனம் மகிழ்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.