சென்னை மாதவரம் நடேசன் நகரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கற்களால் புரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயிலில் ஆய்வு செய்தார். இதையடுத்து வேணுகோபால் நகரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திருக்குளம் பணிகளையும் பார்வையிட்டார். அப்போது மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஶ்ரீதர், இணை ஆணையர் ரேணுகாதேவி, கூடுதல் ஆணையர் சுகுமார் ஆகியோர் இருந்தனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது;
நேர்த்திக்கடன் செலுத்தவரும் பக்தர்கள் பயன்படுத்துகின்ற திருக்குளங்களை சீரமைப்பதற்கு தனிக் கவனம் செலுத்தி சுமார் 220 திருக்குளங்கள் 120 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அன்னதான கூடங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, முடி காணிக்கை மண்டபம், திருத்தேர் கொட்டகை, தங்கம், வெள்ளித் தேர்கள் பாதுகாப்பு போன்ற அனைத்திலும் தனிக் கவனம் செலுத்தி, தெய்வ பக்தர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி விளங்குகிறது.
13 திருக்கோயில்களில் தெய்வத்துக்கு உபயோகம் இல்லாத தங்கங்களை 3 மண்டலமாக பிரித்து ஒவ்வொரு மண்டலமாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட்டு அரக்கு நீக்கி சொக்க தங்கமாக மாற்றுவதற்கும் அதை பொதுமக்களுக்கு காண்பிக்கும் வகையில் வீடியோ பதிவு செய்து பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 13 கோயில்களில் தங்கங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 10 கோயில்களில் பிரிக்கப்பட்ட தங்கங்கள் வைப்பு நிதிக்கு எடுத்துச்செல்லப்பட்டு 427 கிலோ வைப்பு நிதியில் வைக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.5.5 கோடி தொகை வட்டியாக கிடைக்கிறது. அந்த வட்டி தொகை அந்தந்த திருக்கோயிலின் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாதம் 3 கோயில்களில் பிரிக்கப்பட்ட தங்கங்களை ஒன்றிய அரசின் உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மாசாணியம்மன் திருக்கோயிலின் 28 கிலோ தங்கம், திருச்சி மானசாகர் கோயிலில் 12 கிலோ தங்கம், பழனியில் 192 கிலோ தங்கம் ஆகியவை உருக்கு ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி சமயபுரத்தில் இருந்து 500 கிலோ அளவிற்கு தங்கம் மும்பையில் உள்ள உருக்கு ஆலைக்கு அனுப்பப்படும். தொடர்ந்து தங்கங்களை உருக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 23 கோயில்களில் தங்கங்கள் அரக்குகளை நீக்கி, நீதிபதிகள் முன்னிலையில் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. 13 கோயில் தங்கங்கள் உருக்கு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 10 கோயில்களில் உருக்கப்பட்ட தங்கங்கள் வைப்பு நிதியில் வைக்கப்பட்டுள்ளது.
திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐ போன் துறையின் விதிவிலக்கு இருக்கிறதா என்று சட்டப்படி ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.