தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், தனது பெயரை டாக்டர் பீலா வெங்கடேசன் என்று மாற்றம் செய்துள்ளார்.
சென்னையில் வசிக்கும் வெங்கடேசன் – ராணி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா. இவரின் தந்தை எல்.என்.வெங்கடேசன், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வுபெற்றவர். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி பகுதி. தாய் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பீலா ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ் என்பவரை 1992-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு அவரின் பெயர் பீலா ராஜேஷ் என்றானது. ராஜேஷ் தாஸ் தமிழக காவல்துறையின் சிறப்பு டி.ஜி.பி.,யாக பணியாற்றிவர்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சுகாதாரத் துறை செயலாளராக திறம்பட பணியாற்றியவர் பீலா ராஜேஷ். பின்னர் எரிசக்தி துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதன்மை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றி உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளார். அதில் இனி வரும் காலங்களில் தான் பீலா வெங்கடேசன் என்றே அறியப்படுவேன் என்று விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயருக்கு பதிலாக தந்தையின் பெயரை சேர்த்துள்ளார் பீலா ராஜேஷ். மேலும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பீலா மட்டும் என்று வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“