ஒடிசாவில் பொலாங்கீர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்பிரமணியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு வீர திர செயலுக்கான ஜனாதிபதி விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
ஒடிசா மாநிலம், ரூர்கேலா மாவட்டத்தில் பணிபுரியும் அம்மாநில காவல்துறை கண்கானிப்பாளரும் ஐபிஎஸ் அதிகாரியுமான கா.சிவசுப்பிரமணிக்கு குடியரசு தினத்தில் வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்பிரமணி, தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் நேமூர் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. டிரைவராக, மெக்கானிக்காக வேலைபார்த்து இளம் வயதில் தம் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்தார்.
வேலைபார்த்துக் கொண்டே தன் சொந்த முயற்சியில், கடினமாக உழைத்து, உயர்க்கல்வி பயின்றார். பல போட்டித்தேர்வுகளை சளைக்காமல் எழுதினார். படிப்படியாக உயர்ந்தார். ஐபிஎஸ் அதிகாரியாகி, தற்போது ஒடிசா மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
ஒடிசா மாநிலம், ரூர்கேலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆக இருக்கும் சிவசுப்பிரமணி 2018 ஆம் ஆண்டு பொலாங்கீர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கும் பொழுது நக்சலைட் செயல்பாட்டிற்கு எதிரான தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
நக்சலைட் செயல்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையின் போது, ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் அவ்வியக்கத்தின் முக்கிய தலைவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் ஆவர். ஒடிசா மாநிலம் பொலான்கீர் மாவட்டத்தில் நடந்த காவல்துறை மற்றும் நக்சல் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இவ்விரு தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நடவடிக்கை மூலம் நவீனரக துப்பாக்கிகளும், வெடி குண்டுகளும் அவர்கள் பயன்படுத்திய பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நக்சல்களுக்கு எதிரான இந்த முக்கிய நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பாளர் ஆன சிவசுப்ரமணி தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்பட்டது.
நடவடிக்கை மேற்கொண்ட பொலாங்கீர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணி ஐபிஎஸ் தலைமையிலான காவல் துறையை சார்ந்த அனைவரையும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், வீரதீர செயலைப் பாராட்டி அரசு சார்பில் சன்மானங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இது மட்டுமல்ல இவர்களின் வீர தீர செயலை பெருமைப்படுத்தும் விதத்தில், ஒடிசா அரசின் சார்பாக, சிவசுப்பிரமணி மற்றும் அவர் தலைமையில் செயல்பட்ட காவல்துறையினருக்கு மத்திய அரசிடம் வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, 2019 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள், குடியரசு தலைவரின் ஒப்புதலின் பேரில் வீரதீர செயலுக்கான விருது பெறுவோர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26, குடியரசு தினமான இன்று ஒடிசா மாநில கவர்னர் பேராசிரியர் கணேஷி லால் குடியரசுத் தலைவர் சார்பாக வீர தீர செயலுக்கான உயரிய குடியரசுத் தலைவர் விருது சிவசுப்ரமணி மற்றும் அவரது குழுவினருக்கு குடியரசு தினத்தில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் இன்று வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பத்மவிபூஷண் விருதுபெறும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், குடியரசுத்தலைவர் விருதுபெறும் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் திருமிகு. இராஜேஸ்வரி IPS, வீரதீர செயலுக்கான விருதுபெறும் ஒடிசா காவல் கண்காணிப்பாளர் திரு. கா.சிவசுப்பிரமணி IPS, மூவருக்கும் என் வாழ்த்துகள் pic.twitter.com/UbqcmPGplv
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 26, 2020
இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், “பத்மவிபூஷண் விருதுபெறும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், குடியரசுத்தலைவர் விருதுபெறும் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கண்காணிப்பாளர் திருமிகு. இராஜேஸ்வரி IPS, வீரதீர செயலுக்கான விருதுபெறும் ஒடிசா காவல் கண்காணிப்பாளர் கா.சிவசுப்பிரமணி IPS, மூவருக்கும் என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
நக்சல் இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வீரதீர செயலுக்கான குடியரசு தலைவர் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த ஒடிசா மாநில ரூர்கேலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரியும் திரு. கா. சிவசுப்பிரமணி IPS அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். pic.twitter.com/DaRpiM0sVm
— SP Velumani (@SPVelumanicbe) January 26, 2020
அதே போல, தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குடியரசுத் தலைவர் விருது பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சிவசுப்பிரமணிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நக்சல் இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வீரதீர செயலுக்கான குடியரசு தலைவர் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த ஒடிசா மாநில ரூர்கேலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரியும் கா. சிவசுப்பிரமணி IPS அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். என்றும் நக்சல் இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக வீரதீர செயலுக்கான குடியரசு தலைவர் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த ஒடிசா மாநில ரூர்கேலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரியும் திரு. கா. சிவசுப்பிரமணி IPS அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.