ஜாக்டோ ஜியோ அமைப்பின் திருச்சி மாவட்டம் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், உதுமான், குமாரவேல், பால்பாண்டியன், பாபு ஆகியோர் தலைமை தாங்கினர். பாபு வரவேற்று பேசினார்.
மாநாட்டில் தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளரும், மாநில ஒருங்கிணைப்பாருமான வின்சென்ட் பால்ராஜ் சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் 243 ஜ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமிப்பதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15 ஆம் தேதி வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது என்றும் வருகிற 26 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆரோக்கியம் நன்றி கூறினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“