மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து, எஸ்.எம்.எஸ் வந்தும் இதுவரை 1000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு, வரும் 23-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்றும் வகையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக ஜூலை மற்றும் செப்டம்பர் 15 தேதி வரை இந்த திட்டத்திற்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, களப்பணி செய்யப்பட்டு தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு 1.06 கோடி பேருக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டது. அதேநேரம் சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக தமிழக அரசு சார்பில் உதவி எண் மற்றும் இணைதளமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டும் சரியாக செயல்படாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமிற்கு வந்தும் மேல்முறையீடு செய்து வருகின்றனர். ஆனால் அங்குமே சர்வர் முடங்கியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்படுகிறது. அவர்களிடம் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் வந்தும், இதுவரை உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு, வரும் 23-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“