scorecardresearch

காசி தமிழ் சங்கமம் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு

ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்

காசி தமிழ் சங்கமம் ரயில் கன்னியாகுமரியில் இருந்து இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு

த. வளவன் 

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது.  இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முன்னிட்டு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ரயில் இயக்க வேண்டும் என்று கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் பலனாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றிய ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார். 

ஆனால் இந்த ரயில் தமிழ்நாட்டில் எந்த பகுதியிலிருந்து துவங்கும் என்று அறிவிக்கப்படவில்லை.  இந்த ரயிலை தமிழ்நாட்டின் கடைசி மாவட்டம் மற்றும் பிரசித்தி பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலிருந்து துவங்கி தமிழ்நாட்டில் உள்ள சுமார் 15 மாவட்டங்கள் வழியாக அதாவது திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று  தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  

தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு அல்லது காசி வழியாக இயக்கப்படும் ரயில்கள்

1. சென்னை – சாப்ரா கங்காகாவேரி வாரம் இருமுறை வாரணாசி வழியாக
2. எர்ணாகுளம் -பாட்னா வாராந்திர ரயில் வழி கோவை, பெரம்பூh,; வாரணாசி வழியாக
3. ராமேஸ்வரம் – பானராஸ் வாராந்திர ரயில் (வாரணாசியிலிருந்து 4கி.மீ அருகில்)
4. ராமேஸ்வரம் – அயோத்தியா சேது வாராந்திர ரயில் (வாரணாசியிலிருந்து 54 கி.மீ அருகில்)
5. சென்னை- ஹாயா வாராந்திர ரயில் (வாரணாசியிலிருந்து 18கி.மீ அருகில்)
6. பெங்களுர் – தானாப்பூர் தினசரி ரயில் வழி சென்னை பெரம்பூர் (வாரணாசியிலிருந்து 18கி.மீ அருகில்)
7. பெங்களுர் – பாடலிபுத்திரா வாராந்திர ரயில் (வாரணாசியிலிருந்து 18கி.மீ அருகில்)
8. மைசூர் – தர்பங்கா  (வாரணாசியிலிருந்து 18கி.மீ அருகில்)
9. பெங்களுர் – பாட்னா ஹம்சாபர் வாராந்திர ரயில் (வாரணாசியிலிருந்து 18கி.மீ அருகில்)

தற்போது  தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு ராமேஸ்வரத்திலிருந்து வாரம் இரண்டு முறை செல்லும் ரயில் இயங்கி வருகிறது. இந்த இரண்டு ரயில்களும் பரமக்குடி, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயங்கி வருகிறது. இதைப்போல் தமிழ்நாட்டின் வடக்கு பகுதிகளில் வாரணாசிக்கு செல்ல எர்ணாகுளம் பாட்னா வாராந்திர ரயில் சேவை உள்ளது. கர்நாடகா  மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து அதிக ரயில்கள் புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் சென்னை வழியாக இயக்கப் படுகின்றது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து  வாரம் இருமுறை ரயில் சேவை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் விருத்தாசலம், திண்டுக்கல், மதுரை, கொடைரோடு, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலிருந்து காசிக்கு செல்ல நேரடி ரயில் சேவை இல்லை. ஆன்மீகத்துக்கு புகழ்பெற்ற மதுரையிலிருந்து கூட வாரணாசிக்கு நேரடி ரயில் வசதி இதுவரை இல்லை.   

கன்னியாகுமரி – வாரணாசி திட்ட கருத்துரு:

கன்னியாகுமரியிலிருந்து பாரத பிரதமரின் தொகுதியான  வாரணாசிக்கு நேரடி ரயில் வசதி இல்லாத காரணத்தால் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்னார்   2017-18  ஆண்டுகளில்  முயற்சி மேற்கொண்டார்.  அவரின் முயற்சியின் பலனாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே காலஅட்டவணை மாநாட்டில் கன்னியாகுமரியிலிருந்து மதுரை, சென்னை வழியாக வாரணாசிக்கு வாராந்திர ரயில் இயக்க திட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்ட கருத்துருவில் இந்த கன்னியாகுமரி – வாரணாசி ரயில் வெள்ளிக்கிழமை கன்னியாகுமரியில் புறப்பட்டு  ஞாயிற்றுக்கிழமை வாரணாசி சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வாரணாசியில் இருந்து  புறப்பட்டு புதன் அதிகாலை கன்னியாகுமரி வந்து சேருமாறு காலஅட்டவணை அமைக்கப்பட்டது.

இந்த ரயில் மொத்த பயண தூரம் 2977 கி.மீ ஆகும். இந்த ரயில் சூப்பர் பாஸ்ட் ரயில் வேகத்தில் இயக்கப்பட்டால் சுமார் 50 முதல் 55 மணி நேரத்தில் வாரணாசி போய் சேருமாறு இருக்கும்.  இந்த ரயில் முதன்மை பராமரிப்பு  நாகர்கோவில் பணி மனையில் நடைபெறும். இந்த ரயில் வழித்தடம் திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர், விஜயவாடா வழியாக இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் இவ்வாறு இந்த தடத்தில் இயக்கப்பட்டிருந்தால் சென்னைக்கு செல்ல ஒரு ரயில் வசதி கிடைத்திருக்கும். ஆனால் ஏதோ காரணங்களுக்காக இந்த ரயில் இதுவரை இயக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

1990 களில் கன்னியாகுமரியிலிருந்து காசிக்கு நேரடி ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர்  அறிவித்ததாக  பழைய பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து பிற்காலத்தில்  எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. தற்போது தென் இந்தியாவிலிருந்து வாரணாசி மற்றும் உத்திர பிரதேசம் செல்லும் ரயில்கள் எல்லாம் விஜயாவாடா, வாரங்கல், பலர்ஷா, நாக்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. தற்போது பலர்ஷாவிலிருந்து குறைந்த தூரத்தில் ஒரு பாதை மீட்டர் கேஜ் பாதையிலிருந்து அகல பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து திறக்கப்பட்டு உள்ளது.

இதன்படி பலர்ஷா, மிண்டலா, கோண்டியா, நைனிப்பூர், வழியாக ஜெபால்பூர் சென்று பின்னர் எளிதான வாரணாசி செல்ல முடியும். இந்த வழித்தடம் வழியாக தான் சென்னையிலிருந்து ஹாயா செல்லும் வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு நேரடி ரயில் அறிவிக்கப் படும்  பட்சத்தில் இந்த ரயில் எங்கள் மாநில ரயில் வழித்தடம் குறைந்த தூரம் கொண்ட திருநெல்வேலி, மதுரை வழியாக தான் இயக்க வேண்டும். கன்னியாகுமரி –திப்ருகர் ரயில் இயங்குவது போன்ற திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் வழியாக இயக்க கூடாது.என்று எதிர்பார்க்கின்றனர் தென்மாவட்ட ரயில்வே பயணிகள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu kashi tamil sangam train to run from kanyakumari passenger expectations

Best of Express