கோடை குறுவை அழிவுக்கு இழப்பீடு வழங்கவில்லை, குறுவைக்கு தண்ணீர் பெற்று தரவில்லை, குறுவை தொகுப்பு திட்டம் ஏமாற்று நாடகம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை குறுவை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டது. அறுவடைக்கு தயாரான நிலையில் மே, ஜூன் மாதங்களில் பெய்த பெருமழையால் ஒட்டுமொத்தமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்து அழுகிவிட்டது .
மாற்று சாகுபடி செய்ய அரசு வலியுறுத்தியதின் அடிப்படையில் பருத்தி எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து, அறுவடைக்கு தயாரான நிலையில் மூழ்கி அழிந்துள்ளது. இதற்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
குறுவைக்கு காப்பீடு திட்டத்தை திமுக அரசு கைவிட்டதால், விவசாயிகள் மகசூல் இழப்பிற்கான இழப்பீடு பெற முடியாமல் பாதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி உரிய இழப்பீடுகள் வழங்குவதற்கான கணக்கெடுப்புகள் நடத்தப்படாமல் பாதிப்பிலிருந்து திசை திருப்பும் நோக்கோடு விவசாயிகளை ஏமாற்றும் நடவடிக்கையாக குறுவை தொகுப்பு திட்டம் என்கிற பெயரில் திமுக அரசு நாடகமாடுகிறது.
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஏமாற்ற முயற்சிப்பது வெளிப்படுகிறது.
எனவே இந்த தொகுப்பு திட்டம் ஊழல் முறைகேடுகள் செய்வதற்கு வழிவகுக்குமே தவிர, பாதிக்கப்படுகிற விவசாயிகளுக்கு தீர்வாக அமையாது.
விவசாயிகளுடைய பாதிப்புகளை மூடி மறைப்பதற்கும், அவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் தப்பிப்பதற்கும் இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிராக்டர் மற்றும் நடவு அறுவடை இயந்திரங்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், அத்திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து குறுவை தொகுப்பு திட்டம் என்கிற பெயரில் ஒரு ஏமாற்று நாடகத்தை அடங்கேற்றி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளை கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி பாதுகாக்க முன்வர வேண்டும்.
மேலும், கர்நாடக அணைகள் நிரம்பி உள்ள நிலையில் அவசரகால சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தண்ணீரைப் பெற்று ஜூன் மாத இறுதிக்குள்ளாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுகிய கால குறுவை பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம், என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“