/tamil-ie/media/media_files/uploads/2020/06/a49.jpg)
தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகளை தொகுத்து, உங்களுக்கு வழங்குகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்....
1. சென்னையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை, எந்தவித ஒளிவு மறைவும் இன்றி, கூட்டல் கழித்தல் இல்லாமல், அப்படியே அடுத்த இரண்டு நாட்களுக்குள், மக்கள் மன்றத்தின் முன் தமிழக அரசு வைக்க வேண்டும்.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவில்லை என்றால், திமுக நீதிமன்றத்தை நாடும் என எச்சரிக்க விரும்புகிறேன்" என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.
2. அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது. மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அரசு, தனியார் பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
3. "தமிழகத்தில் 3 மாதத்துக்கு பிறகு கொரோனா 2வது அலை ஆரம்பிக்கலாம். மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். சென்னையில் 3 மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் அதிகம் பாதித்த இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க பரிந்துரை. எந்த ஒரு நோயும் உச்சத்திற்கு சென்றுதான் படிப்படியாக குறையும்" என முதல்வருடனான ஆலோசனைக்கு பின் மருத்துவக் குழு பேட்டி அளித்துள்ளது.
4. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளதாகவும், நேர்மையாக நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை ஒரு ஆண்டுகள் நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதே வேளையில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலையில் உள்ளவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்களுக்கும் எதிரானது என்றும் எனவே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளவர்களுக்கான ஓய்வு பெறும் வரை நீட்டித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்திற்குள் தமிழக அரசு இதுகுறித்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
5. கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் கோவை அரசு கலைக் கல்லூரி 34-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகள் அளவில் மாநிலத்தில் 2-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
தேசிய அளவிலான தர வரிசைப் பட்டியலில் 57.81 புள்ளிகள் பெற்று கோவை அரசு கல்லூரி 34-வது இடத்தையும், அரசுக் கல்லூரிகள் அளவில் மாநிலத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
அரசுக் கல்லூரிகளைப் பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை மாநிலக் கல்லூரி முதலிடத்தையும், கோவை அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடத்தையும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளது பாராட்டத்தக்கது.
101-150 வரையிலான தரவரிசையில் சென்னை பாரதி மகளிர் கல்லூரி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி, கும்பகோணம், உடுமலை, சேலம் அரசுக் கல்லூரிகளும், 151-200 வரையிலான தரவரிசையில் திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, வேலூர் முத்துரங்கம் கல்லூரி, திருவண்ணாமலை அரசுக் கல்லூரி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
6. நாளை முதல் 30ஆம் தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைக்கப்படும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர்அறிவித்துள்ளார்.
தென்சென்னை,மத்திய சென்னை, வட சென்னையில் உள்ள பேரவை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.