பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு தினம் : தமிழகத்தின் தலையெழுத்தினை மாற்றிய இரண்டு முக்கியமான தலைவர்களின் இறந்த தினம் இன்று. சுயமரியாதை என்ற பெயரில் சாதி, மொழி, மத பாகுபாடுகளை கடந்து நிற்க தமிழர்களின் அறிவுக் கண்ணை திறந்த ஈ.வே.ராமசாமி அவர்களின் இறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு தினம் - தலைவர்கள் அஞ்சலி
அதே போல் ஏழை எளிய மக்களின் வாழ்வில் என்றும் நீங்காத இடம் பிடித்த நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவருடைய 31வது இறந்த தினம் இன்று.
பெரியார் நினைவு தினம்
சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட இயக்கத்தின் தலைவராக இருந்து, தமிழகத்திற்கான சீர்த்திருத்த பாதையை நிறுவிய பெரியாரின் நினைவு தினம் இன்று. அவரின் நினைவு தினம் தமிழகமெங்கும் இன்று அனுசரிக்கப்படுகிறது. கட்சித் தலைவர்கள் பலர், பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றார்கள்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் சிம்சன் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிகழ்வில், திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் இறந்து 45 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பெரியாரின் லட்சிய சுடரை ஏந்திடுவோம் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நினைவு தினம்
தமிழகத்தின் முன்னாள் முதல்வராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் காலமாகி இன்றுடன் 31 ஆண்டுகள் ஆகின்றன. எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்களும் அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றார்கள்.
எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம், மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/epsjpeg.jpg)
அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களின் அஞ்சலியை செலுத்தினர். அதே போல் புதுச்சேரி மாநிலத்தில், எம்.ஜி.ஆர் சிலைக்கு, முதல்வர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் படிக்க : எம்.ஜி.ஆரையே பழி தீர்க்க நினைத்த காங்கிரஸ் - காணொளி ஆலோசனையில் நரேந்திர மோடி