காமராஜர் நினைவு தினம் தலைவர்கள் அஞ்சலி : காமராஜர் என்றவுடன் உங்கள் மனதில் என்ன தோன்றுகின்றது? பொதுவாக கல்விக் கண் திறந்தவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர், இரண்டு பிரதமர்களை உருவாக்கியவர், எளிமையானவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த தலைவர் என்ற அனைத்து பெரும் எண்ணங்களுக்கும் அவர் நிகரற்ற சொந்தக்காரர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இளம்பருவத்தில் காமராஜர்
எளிமைக்கும் மக்கள் நல பணிக்கும் பெயர் பெற்ற காமராஜர் இம்மண்ணைவிட்டு நீங்கிய தினம் இன்று. விருதுநகர் மாவட்டத்தில் 1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி பிறந்தவர் காமராஜர். குலதெய்வப் பெயர் காமாட்சியை அவருக்கு அந்நாளில் சூடினார்கள். பின்னாட்களில் அது காமராஜாக உருமாறியது.
சத்ரிய வித்யா சாலா என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் காமராஜர். பல்வேறு காரணங்களால் கல்விப் படிப்பை தொடர முடியாத காமராஜர் தன்னுடைய மாமாவின் கடைக்கு வேலைக்கு சென்றார். அச்சமயம், இந்தியா விடுதலை போராட்டத்தில் மிக்க முனைப்புடன் செயல்பட்டு வந்தது. பெ. வரதராஜூலு நாயுடு ஆகியோரின் தீவிர செயல்களையும் பேச்சுகளையும் கவனித்து வந்த காமராஜர் பின்னாளில் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.
தன்னுடைய 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டவர் காமராஜர். தன்னுடைய அரசியல் குருவாக சத்திய மூர்த்தியை ஏற்றுக் கொண்டார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக உயர்வு பெற்றார் காமராஜர். ராஜாஜி தலைமையின் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகம் 1930ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அதில் பங்கேற்ற தலைவர்களில் முக்கியாமனவர் காமராஜர். பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட காமராஜர் கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.
காமராஜர் ஆட்சி
1953ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் காமராஜர். அவரின் ஆட்சி காலத்தில் தமிழகம் தன் பொற்காலத்தை கண்டது. முதன்முறையாக பள்ளியில் மத்திய உணவு திட்டத்தினை இவர் அமல்படுத்தினார். பின்னர் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
ஏராளமான அணைகளையும், பாலங்களையும், பள்ளிக் கூடங்களையும் கட்டினார். பெருந்தலைவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்விக் கண் திறந்தவர், கர்மவீரர் என்று இன்றும் பலரின் ஞாபகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் காமராஜர். 1976ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பித்தது.
காமராஜர் நினைவு தினம் தலைவர்கள் அஞ்சலி